அவள்
இந்த பேருந்துகள் தான் எத்தனை காதலை தூக்கித் திரிகிறது. 💑
இருக்கைக் கம்பியின் எதிரெதிர் பக்கங்களில் நானும் அவளும் சாய்ந்துக்கொண்டு பத்துக் காத தூரம் கண்கள் பார்க்காதபோது பார்த்துக்கொண்டோம். மின்னலும் பாயவில்லை பட்டாம்பூச்சியும் பறக்கவில்லை எனக்குள். மாறாக மூளை, நினைவுகளை பின்னோக்கியக்கி அத்தை மகள் சாயல் அவள் முகத்தில் தெரிகிறதுப் பார் என்றது.
பதினெட்டு ஆண்டுகள் முன்னர் என் ஊருக்கு மேற்கே ஒன்றரை காத தூரத்திலுள்ள அத்தைப் பெண்ணின் ஊருக்கு சென்றிருந்தோம். சிறு வயதில் நமக்கு பிடித்தமான பெட்டிக் கடைக்கு புதிதாக சரக்கு வருகையில் சிறுவ சிறுமியற்களை வியப்பிலாழ்த்தும் நகரத்து பொம்மைகளை விளம்பரத்திற்கு தொங்கவிட்டு கல்லா கட்டும் கடைக்கார அக்காவிடம் நான்கு இருபத்தைந்து காசுகளை கொடுத்து, பூசியவுடன் ஒட்டும் மருதாணிச் சாயத்தை வாங்கி வைத்திருந்தாள் அத்தைப் பெண் இமய புதல்வி. எனக்கு பத்தும் அவளுக்கு என்னைவிட பத்து மாதம் அதிகமாகவும் இருந்தது வயது. நெடுங்காலம் கழித்து சந்திக்கின்றோம். ஆனந்தமாய் தம்பி என்று வரவேற்றாள். தம்பி அல்ல என்பதை பின்பு தான் உணர்ந்துக்கொண்டாள். உபசரிப்புகள் முடிந்ததும் அவளுக்காக வாங்கியிருந்த மருதாணிச் சாயத்தை காது குடையும் பஞ்சு முனைக் குச்சியால் நனைத்து அவளுக்கு தெரிந்த கோலத்தை என் கையில் இட்டாள். அப்போது தோன்றவில்லை என் வாழ் நாள் முழுவதும் நான் நினைத்து மகிழும் நினைவுகளில் ஒன்றாக அந்நிகழ்வு அமையுமென்று. இதில் இருந்து நான்காண்டுகள் கழித்து அவள் பூப்பெய்த விழாவிற்கு சென்றிருந்தேன். வா விஜய் என்றாள். சல்லடையில் தண்ணீர் ஊற்றி அவள் மீது மட்டும் மழையை பொழியவிட்டார்கள், நான் நனைந்தே போனேன்.
அன்றிலிருந்து ஆறு ஆண்டுகள் கழித்து என் பாட்டியின் இரங்கலில் போவோர் வருவோரின் அழுகையை நான் மதிப்பிட்டுக் கொண்டிருந்ததாக என் இருபத்திரண்டாவது வயதில் கூறினாள். கைபேசி எண்ணை பரிமாறிக் கொண்டோம். அத்தைப் பெண், மாமன் மகன், சுற்றம் சூழ்நிலைகள் என்று அனைத்துக் கூறுகளும் எங்களை காதலில் தள்ளியது. கண்ணியமான காதல் உச்சம் பெற்றிருந்தது. எழுத்துகள் தொலைத்த அச்சகமானேன். படிக்க ஆர்வமில்லா புத்தகமாகிப் போனேன். காதல் முறிந்தது. ஆனாலும் அவளுக்கு என்னைப் பிடித்திருந்தது. எதிரெதிர் திசைகளில் தான் எங்கள் தினசரிப் பயணம். என் பேருந்தை அவர் பேருந்து கடக்கையில் எனக்காக கையசைப்பதை அவள் நிறுத்தவேயில்லை. கல்லூரி முடித்து பேருந்தில் வீடு திரும்புகையில், அவளைக் கண்டதும் பாதியில் இறங்கிவிட்டேன். கேரளா சென்றபோது அவளுக்காய் வாங்கி வந்த கிருஷ்ணராதா பொம்மையை தேங்காய் சிரட்டையை நார் அகற்றி பளபளபாக்கி அதையே பெட்டகமாய் கருதி அதில் வைத்துக் கொடுத்தேன். சிறு புன்னகையில் என்னையே மறந்து பேருந்தை நழுவவிட்டேன். பையில் பணமில்லை. எட்டு ரூபாய்க்கு அவளிடம் தலை சொறிந்து நின்ற காட்சியை கண்டிப்பாக அவள் மறந்திருக்க மாட்டாள். நல்ல வேலையிலுள்ள ஒருவரோடு மணமுடிந்து சென்றாள் மகிழ்வோடு. எனக்கும் மகிழ்ச்சியே. அவளது வளைகாப்பிற்கு சென்று வந்த என் அம்மா சொன்னார், "இமய புதல்வி உன் நலங்கேட்டாள்" என்று.
இவ்வளவு நினைவுகளை கொடுத்த ஒருத்தியின் சாயலில் ஒருத்தி என் எதிரே நிற்கிறாள் என்றால், எப்படித் தான் எனக்கு விலகி நிற்கத் தோன்றும்.
-ராம் என்கிற விஜய்
Comments
Post a Comment