காதலிக்க நேரமில்லை
பொன்மகள் பாதம் மண்மகள் அறியா கண்ணகியாய் நானும் இங்கே உன்னை நினைத்து என் நாட்களை கழித்துக்கொண்டு காதலை கூட்டிக்கொண்டும் இருக்கிறேன். நீயோ கோவலனாய் என்னை புறந்தள்ளி என் அகம் நீங்கி சென்றுவிட்டாய்.
படிக்காத என் அம்மா, என்னை படித்தது போதுமென்று கையில் அடுப்பூத ஊதாங்கோலை கொடுக்காமல் பேனாவை கொடுத்து அம்மா அனுப்பினாள் கல்லூரிக்கு.
இரண்டு மாதங்கள் ஓடியது,
அவ்வளவு கூட்டம் அந்த பேருந்தில், வௌவ்வால் போல நீ பேருந்தில் தொத்திக் கொண்டிருந்தாய். கூட்டம் குறைந்ததும் படியில் நின்றபடி உன் நண்பர்கள் சூழ மிரட்டும் தொனியில் 'உன் பெயரென்ன' என்று கேட்டாய். முதல்முறையல்ல பேருந்தின் வௌவ்வால்கள் என்னை வம்பிழுப்பது.
பெண்ணாய் பிறந்துவிட்டேனே பகடிகளை தாங்கிக்கொள்ளும் பக்குவம் எனக்கு எப்போதோ வந்துவிட்டது.
பயந்தே நான் சொன்னேன் 'இசை' என்று.
ஊர்... விலாசம்... கேட்டு நச்சரித்தாய், சொன்னேன் அத்தனையும் பயந்தே!
அந்த பேருந்தில் தான் என் தினசரி என்றபோது பயந்தென்ன லாபமென சகஜமாகிவிட்டேன்.
நிறுத்தம் வந்ததும் என் பின்னே துரத்துவதாக எண்ணி மிரண்டேன். பின்பு தான் தெரிந்தது உனக்கும் அது தான் நிறுத்தமென்று. உன்னால் ஆபத்தேதுமில்லை என்றுணர்ந்தபோது, உன்னை இரசிக்கலானேன். பேருந்துக்காக பேருந்துக்காக வழி மேல் விழி வைத்த நாட்கள் ஓடி, விழியில் நீர் தேக்கி வழியில் உன்னை எதிர்நோக்கி காத்திருந்தேன்.
படியில் தொங்கியதற்காக போலிஸில் பிடிபட்டாயே அவர்கள் உன் சட்டையை பிடித்தபோது எனக்கு வலித்தது.
என் பின்னால் உன்னை அலைய விட்ட நாட்களை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.
நினைவிருக்கா, நான் சேர்த்த சில்லறைகளை எண்ணிப் பார்க்காமல் கைக்குட்டையில் முடித்து கொடுத்தேனே... நான் மறக்கவில்லை. அந்த சில்லறைகள் இன்னும் நம் பெயரை சொல்லி சத்தம் போட்டுக் கொண்டுதான் இருக்கும்
நடத்துனர் பையிலோ, செல்லரித்துபோன அந்த பெரியதெருவின் மரக் கல்லாப் பெட்டிகளிலோ, யார் கண்டது என்னைப் போலவே இன்னொரு காதலி தன் காதலனுக்காய் கைக்குட்டையில் முடித்து கொடுத்திருக்கலாம்
அந்த நாணயங்கள் இன்னுமொரு காதல் கதையை கேட்டு கொண்டிருக்கலாம்
நினைவிருக்கா, நீ விற்ற என் தங்க மோதிரத்துக்கு மாற்றாய் வேறொன்று கொடுத்தாயே, அந்த மாலையில் மழை எதற்காக பொழிந்திருக்கும்?
வான்மகள் விரும்பும் காதல் கதையாக இது இருந்திருக்கலாம் உற்றார் உறவினர் கண்டால் இது தொடராது என்றெண்ணி ஊரையே வீட்டுக்கு அனுப்பிவிட்டு நம்மை மட்டும் நகைக் கடை வாசலில் நிறுத்தி அழகு பார்த்திருக்கலாம்
புது வாய்ப்பு கிடைத்திருக்கிறது என் தாயை மகிழ்விக்க. அண்ணணை கரையேற்றும் பொறுப்பும் தம்பியை கரையேற்றும் பொறுப்பும் சேர்ந்துவிட்டது.
தீ என தெரிந்தும், அது சுடும் என தெரிந்தும் மின்மினிக்கள் விளக்கை சுற்றியே பறக்கும். திரியை தின்றழிக்கும் அந்த தீச்சுடரின் மீது என்ன தான் காதலோ அந்த பூச்சிக்கு. அந்த மின்மினியின் நிலை தான் இந்த கண்மணிக்கு. விட்டுவிடவும் முடியாமல் தொடரவும் முடியாமல் திணறுகிறேன்.
காதல் என்பது கோவிலென்றால் அதை தாங்கும் தூண்கள் நாம். தூண்களுக்கிடையே தூரம் நிச்சயம் வேண்டும். தூண்கள் ஒட்டி நின்றால் கோவிலைத் தான் தாங்குமா?
அட்டவணை போட்டது போல் தினசரி உன்னிடம் கதைத்த நாட்களை நான் மறப்பேனா. பொறுப்புகள் தான் தலைக்கு ஏறி இருக்கிறது. உனக்கு ஏனோ அது தலைக்கனமாக தெரிகிறது.பயணிக்கப் போகிறேன்..., வானமேறி இவ்வையத்தை காண போகிறேன். உன் ஏமாற்று கொஞ்சல்களுக்கு இனியும் இசையமாட்டாள் இந்த இசை.
கோவலனே உலகம் என்று இருந்தாள் கண்ணகி. அவள் மதிப்பறியாமல் மாதவியை தேடிப்போன கோவலனை அந்த கண்ணகி ஏற்றுக்கொண்டாள். நான் மாட்டேன். மதுரையையே எரிக்கும் கோபம் எனக்குண்டு அதை இந்த கோவலனை எரித்து தீர்த்துக் கொள்கிறேன். Bye!
-ராம் என்கிற விஜய்
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
Comments
Post a Comment