சோளகர் தொட்டி
அறிவியலில் Chaos theroy என்றொன்றுண்டு, நிகழ்வுகள் ஒன்றனுக்கொன்று தொடர்புடையவை என கூறலாம். பிரபலமான எடுத்துக்காட்டாக, ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பிற்கும், எங்கோ உருவாகும் சூறாவளிக்கும் தொடர்புண்டு என்று நீளும். இந்த எடுத்துக்காட்டை நீங்கள் தசாவதாரம் திரைப்படத்தில் கமல்ஹாசன் கூற நீங்கள் கேட்டிருக்கலாம்.
இந்த Chaos theory போன்று சோளகர் தொட்டியை சேர்ந்த மக்களும், வீரப்பன் என்ற ஒரு நபரால் அல்லலுற்று, அவமானப்பட்டு, கொலையுண்டு, கற்பழிக்கப்பட்டு வாழும் போதே நரகத்தை சந்தித்து, சாகாமல் நடைபிணமாய் திரிந்த கதையை கேட்கும்போது முதுகுத் தண்டு சில்லிடும் பயத்தைஉணராதோர் யாருமில்லை.
வனத்தின் பிள்ளைகளாக அதனோடு இயைந்து வாழ்க்கையை நகர்த்தும் அவர்களது வாழ்வியல் நகர மாந்தர்களுக்கு கனவு வாழ்க்கையாக இருக்கிறது.
சொந்த பூமியிலேயே திருடர்கள் போல சித்திரிக்கப்படுகிறோம் என்ற கவலை அவர்களிடத்து உண்டு. கஞ்சா புகைப்பதும், மான்களை, கரடிகளை சுடுவதும் அரசால் தடைசெய்யப்பட்டதால் அந்த கவலை. அவர்கள் சுட்டுத்தான் மான்கள் குறைந்தது என்பது போல அரசு அவர்களின் துவக்கைகளை பிடுங்கி எரிந்தது. அவர்களின் காடாளும் உரிமையை பறித்துவிட்டது. அடிக்கடி தொட்டியை சேர்ந்த ஆண்களை சிறு சிறு குற்ற வழக்குகளில் கோர்த்துவிட்டு அவர்களை பிழிந்தெடுப்பது. சிறு கடன் தொகைக்கு நிலத்தையே அபகரித்துக் கொள்வது. மலையையே கலப்பைப் போட்டு உழுதவர்களுக்கு பட்டா வாங்க வேண்டிய தேவையிருக்கவில்லை. அரசின் அங்கீகரிக்கப்படாத கையூட்டு திட்டத்தின் மூலம் பட்டாவை பெற்று மண்ணின் மைந்தர்களை துரத்தி அடித்தனர்.
வீரப்பனுக்கு அரிசியும் பருப்பும் போன்ற உணவு பண்டங்களை கொடுத்துதவுவதாகக் கூறி தொட்டியின் ஆண்களை சிறைபிடித்து 24 மணிநேரமும் ஒரு நொடி தவறாது அவர்கள் சித்திரவதை அனுபவிப்பதை உறுதி செய்கிறார்கள்.
தொட்டியின் பெண்களை சீரழித்தும் உடற்பாகங்களில் மின்சார கொக்கியிட்டு மின்சாரம் பாய்ச்சி அவர்கள் துள்ளத்துடிப்பதை இரசிக்கிறார்கள். தொட்டியை சேர்ந்த அப்பாவி சோளகர்களுக்கு வீரப்பன் படையின் உடையணிவித்து, யார் சுட்டுக் கொல்வது கர்நாடக காவல்துறையா தமிழ் காவல் துறையா என்று குழப்பம் வேறு. தினசரி பத்திரிக்கையில் நாம் படித்திருப்போம், வீரப்பன் கூட்டாளி பிடிபட்டான், கொல்லப்பட்டான் என்று, வீரப்பனை நெருங்கிவிட்டதாக மக்களையும் அரசு அதிகாரிகளையும் நம்ப வைக்கவே அப்பாவிகளின் உயிரை குடித்திருக்கிறார்கள். நரகத்தின் ஊழியர்களாய் இரு மாநில காவல்துறை இருந்துள்ளது.
பேயும் பிசாசும் செய்ய துணியாத செயல்களை செய்துள்ளனர். கர்பிணிகளை சீரழித்து, கணவன் முன் மனைவியை சீரழித்து, தந்தையை மகன் அடிப்பது, மகனை தந்தை அடிப்பது போன்ற இழி செயல்களை புரிந்து காவல்துறைக்கு நற்பெயர் வாங்கி வைத்துள்ளனர்.
Hitler-இன் வதை முகாம் போல, வீரப்பனுக்கு உதவியதாக பார்த்ததாக பெண்கள் குழந்தைகள் ஆண்கள் என அனைவரையும் ஆட்டு மந்தைப் போல workshop என்று பெயரிடப்பட்ட இடத்தில் வைத்து, தங்களுக்கு தோன்றும்போதெல்லாம் வதைத்துள்ளனர். படித்ததை நினைவுக்கு கொண்டுவரக் கூட மனம் துணியவில்லை.
வீரப்பன் தேடலில், வீரப்பனைத் தவிர அப்பாவி பழங்குடியினர் பலர் பலியாயினர் பலர் வாழ்விழந்தனர். அவர்களின் தினசரி வாழ்க்கை முறையே தலைகீழாய் மாறிவிட்டது. ஆதிகுடியின் கதை சொல்லும் விழாக்கள், சடங்குகள் காட்டோடு இருந்த பிணைப்பு என அத்துனையும் அழிந்துவிட்டது அழித்துவிட்டனர்.
கதையை படித்து முடிக்கையில் தோன்றுவதொன்று தான், ஏன் அவர்கள் யாரும் படித்தவர்களின் உதவியை நாடவில்லை, புகார் கூட அரசாங்கத்திடம் எந்த வகையிலும் தெரிவிக்கவில்லை. அடிகளை தாங்குவது அல்லது தப்பித்து போவது ஒன்றே தீர்வு என்று இருந்துள்ளனர்
*சோளகர் தொட்டி, கண்ணீர் நிரம்பிய கிராமம்.*

http://192.168.5.5:83/default.aspx
ReplyDelete